140 குழந்தைகள், 200 ஒட்டகங்கள்... 550 ஆண்டுகளுக்கு முன் நடந்த மாபெரும் நரபலி

பெருநாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஒட்டகங்கள் நரபலி கொடுக்கப்பட்டது தொல்லியல் துறையினரின் ஆராய்ச்சி மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் ஒரே நேரத்தில் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான பெருவின் வடபகுதியில் கடலோர பிரதேசத்தில் உள்ளது ட்ருஜிலோ நகரம். அங்குள்ள லாஸ் லாமாஸ் எனும் இடத்தில், ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழு, நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடன் இந்த ஆய்வை 2011-ம் ஆண்டு தொடங்கியது.
சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
நரபலி:
அதில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில், லாஸ் லாமாஸில் மாபெரும் நரபலி நிகழ்வு ஒன்று நடந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். முற்கால சிமு நாகரிக மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இன்றைய ட்ருஜிலோவுக்கு அருகில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புகள்:
சம்பந்தப்பட்ட இடத்தில் 140 குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனுடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை கார்பன் பரிசோதனை செய்ததன் மூலம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்:
நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள் 5-14 வயது மதிக்கத்தக்கவர்கள் எனக் கூறப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்டுள்ள ஒட்டகங்களும் 18 மாதங்களுக்குள் இருந்த இளம் ஒட்டகங்கள் என்று தெரிகிறது. இவை ஆண்டஸ் மலை தொடரை நோக்கி கிழக்கு திசை பார்வையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன. நரபலி கொடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

உலக வரலாற்றிலேயே:
இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே இதுவரை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வில் கலந்து கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்கள் மற்றும் ஒட்டகங்கள்:
ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு இதே பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.

Comments