நாம்தான் பதில் சொல்ல வேண்டும்




டைசியாக நான் கண்ட அந்த முகம் எனக்கு நினைவில்லை,
கடைசியாக நான் கேட்ட குரல் யாருடையதென்று எனக்குத் தெரியாது.


அவ்வளவு சட்டென்று இழந்துபோனேன்
எனது பார்வையையும் உணர்வுகளையும்.
எந்தத் தடமுமில்லை என்ன நடந்தது என்பதற்கு, மரித்துப்போனேன்.
மரத்துப்போயிருந்தன என் உதடுகள்
அவர்களின் முரட்டுக் கைகள் என் மணிக்கட்டுகளை நசுக்கியபோது,
உதவி வேண்டிச் சில பெயர்களை முணுமுணுத்தது என் இதயம்.
நசுக்கப்பட்டன என் விலா எலும்புகள், அவர்களின் பாவத்தின் கனத்தால்,
என் தோல் முழுவதிலும் கோடிட்டன மரணத்தின் சிராய்ப்புகள்.
என்ன நடக்கிறது என்பதை
அப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லை எனது பிஞ்சு மனதால்,
பேய்கள் நிஜமில்லை என்று எப்போதும் சொல்வாள் அம்மா.
விலங்குகளைப் போல என்னை நோக்கி அவர்கள் உறுமினார்கள்,
என்னை உயிருடன் விழுங்கிய அவர்கள், என்ன மாதிரி மனிதர்கள்?
பொறுக்கியெடுக்கப்பட்டேன், கடுமையாக நடுங்கிப்போயிருந்தேன்,
என் தோலிலிருந்து அப்படித்தான் உதிர்ந்தது என் ஆன்மா.
அந்த இறுதி மூச்சு என் உதடுகளைப் பிரிந்தபோது,
மங்கத் தொடங்கியது துளைப்பதுபோன்ற அந்த வலி.
என் வாழ்வின் அந்த 7 ஆண்டுகளும்
பொருட்படுத்தவே முடியாததாக
மிகக் குறைவானதாக இருக்கலாம் எனக்கும் உங்களுக்கும்.
ஆனால், மரணத்தை நோக்கி
என்னை மிக வேகமாக மூப்படையச் செய்தன
அந்த 8 நாட்களும்;
தசாப்தங்கள் பலவற்றையும்விட நீண்டவை,
தாக்குப்பிடிக்கச் சாத்தியமே இல்லாதவை
அந்த 8 நாட்கள்.

- Umibilal தமிழில்: ஆசை
(காஷ்மீரைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமியைப் பற்றிய இந்தக் கவிதை இன்ஸ்டாகிராமில் வெளியானது.)
யார் இந்த சிறுமி?
பகேர்வால் இனத்தைச் சேர்ந்தவர்களின் எட்டு வயது மகள். 
யார் இந்த பகேர்வால்கள்? 
கால்நடை மேய்ப்புப் பழங்குடிகளான இவர்களே கார்கில் ஊடுருவலாளர்கள் குறித்து ராணுவத்துக்கு சரியான நேரத்தில் தகவல் தந்தவர்கள். 
இந்தச் சிறுமியை வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொன்றவர்களை இப்போது பாதுகாப்பவர்கள் யார் யார்? 
இனிமேல் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

- கவிஞர் ஜாவித் அக்தர்

Comments