11.வியக்க வைக்கும் அதிசய விலங்குகள்

உலகில் நமக்குத் தெரியாத விலங்குகள் கோடிக்கணக்கில் உள்ளன. அவற்றின் வாழ்க்கை முறையில் பல்வேறு சுவாரசியங்களும் ஒளிந்துள்ளன. மனிதன் கண்டறிந்த இயற்கை அதிசயங்களில் சிலவற்றின் அணிவரிசை இதோ... 

மரம் ஏறும் மீன்: தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்க தேசம் போன்ற நாடுகளில் காணப்படும் ‘அனபஸ் ஸ்கேண்டென்ஸ்’ என்ற வகை மீன்கள், மரமேறக் கூடியவை. நீரிலும் நிலத்திலும் மாறி மாறி வாழும். இதன் தலையில் உள்ள ஒரு விசேஷ உறுப்பின் மூலம் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இம்மீனால் சுவாசிக்க முடியும். 6 முதல் 8 மணி நேரம் வரை இது நீரை விட்டு வெளியே வாழும் ஆற்றல் கொண்டது.

பம்பிள்பீ வௌவால்: உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச் சிறியது பம்பிள்பீ வௌவால். இது, ஒன்றே கால் அங்குல நீளத்தில் இருக்கும். இதன் எடை, அதிகபட்சம் இரண்டு கிராம். தாய்லாந்து, மியான்மர் நாடுகளின் சுண்ணாம்புக் குகைகளில் இவை கூட்டமாய் வாழும். இதை ‘பன்றி மூக்கு வௌவால்’ என்றும் கூறுவர். இவை தங்கள் உடல் எடையைப் போல் மூன்று மடங்கு அதிகமான உணவை சர்வசாதாரணமாக உண்ணக் கூடியவை. 

ஜகானாஸ்: அல்லி இலைகள் மீது நடந்தே இரை தேடும் பறவையின் பெயர் ஜகானாஸ். உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் வசிக்கும் இந்தப் பறவை, அல்லி இலைகளின் மீது வேகமாக நடக்கும். இவற்றின் குச்சியான கால்களும், நீண்ட கால் பாதங்களும் இலை வளைந்தோ, கிழிந்தோ விடாமல் நிமிர்ந்து உறுதியாக நடக்க உதவுகின்றன. அந்த இலைகளின் மீதே கூடுகளைக் கட்டி, முட்டையிடும்.

மீன் பிடிக்கும் எலி: நியூ கினியாவில் காணப்படும் ‘மீன் பிடிக்கும் எலி’, மீன் பிடித்து உண்ணும். அதுவும் எப்படித் தெரியுமா? இது தன் வாலையே தூண்டிலாகப் பயன்படுத்துகிறது. கரையில் இருந்து கொண்டு, தன் வாலை நீருக்குள் விடுகிறது. வாலை புழு என எண்ணி மீன் கடிக்கும்போது, சட்டென்று தன் வாலை மேலே இழுக்கும். அதனுடன் வரும் மீனைப் பிடித்துத் தின்றுவிடும்.

ஜெயின்ட் பெட்ரெல்: ஜெயின்ட் பெட்ரெல் என்பது ஒரு வகை கடல் பறவை ஆகும். பனிக்கட்டியாய் உறைந்திருக்கும் வட துருவக் கடல் பிரதேசங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பறவைகள் தரையில் இருக்கும்போது, அளவுக்கு அதிகமாக உணவு உண்ணும். பறக்க ஆரம்பிக்கும்போது, உடல் கனமில்லாமல் இருப்பதற்காக ஓரளவு உணவைக் கக்கி தன் லக்கேஜ் வெயிட்டைக் குறைத்துவிடும்.

நார்வால்: இது ஒரு வகை திமிங்கலம். இதற்கு காண்டா மிருகம் போல முகத்தில் நீண்ட ஒற்றைக் கொம்பு உண்டு. கூர்மையாக முறுக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கொம்பு, எதிரிகளைத் தாக்குவதற்கு பயன்படுகிறது. சுமார் இரண்டரை மீட்டர் நீளம் வளரும் இந்தக் கொம்பு, ஆண் நார்வாலுக்கு மட்டுமே உண்டு. இவை ஆர்க்டிக் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றன. 

விசில் மர்மோத்: சிறு கரடி போலத் தோற்றமளிக்கும் மர்மோத், பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இவற்றில் ‘விசில் மர்மோத்’ தனிச்சிறப்புடையது. ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் இவை சுறு சுறுப்பானவை. குளிர்காலம் முழுவதும் தங்கள் பதுங்கு குழிகளில் இவை தூங்கும். ஆபத்து ஏதும் வருவதாக உணர்ந்தால், எச்சரிக்கை விசில் அடிக்கும் இயல்புடையவை. அதனால், ‘ஆல்ப்ஸின் காவல்படை’ என்ற செல்லப் பெயரும் இவற்றுக்கு உண்டு.

Comments

Popular Posts