எப்படிச் செயல்படுகிறது இன்வெர்ட்டர் ஏ.சி... வாங்கலாமா கூடாதா?

ஆறு மணி கூட இப்போது அதிகாலை இல்லை. 7 மணிக்கெல்லாம் சுட்டெரிக்கிறது வெயில். இரவு 7 மணிக்குக் கூட மின்விளக்குகளைப் போட வேண்டியிருப்பதில்லை. இந்த சம்மர் நமக்கு இன்னும் நிறைய ‘காட்ட’ காத்திருக்கிறது. ”இளநீர் குடிங்க”, ”தண்ணீர் நிறைய குடிங்க”, ”வீட்டைக் காத்தோட்டம்மா வச்சுக்கோங்க” என ஆயிரம் இயற்கை வழிகள் சொன்னாலும் எல்லோரும் போய் நிற்பது என்னவோ ஏ.சி விற்கும் கடைகளில்தான். ஏ.சி தான் வாங்கப்போகிறோம் என முடிவு செய்துவிட்டால் எந்த ஏ.சி வாங்குவது? விளம்பரங்களில் 'இன்வெர்ட்டர் ஏ.சி தானே அதிகம் வருகிறது.
அது என்ன இன்வெர்ட்டர் ஏசி?
இன்வெர்ட்டர் ஏசி குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும், நீண்ட நாள்கள் உழைக்கும். இன்னும் இன்னும் ஏராளமான பலன்களை சேல்ஸ்மேன் சொல்லியிருப்பார். அவை எல்லாம் உண்மையா என்பதை அறிய இன்வெர்ட்டர் ஏ.சி.யின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டாலே போதும்.
எப்படி செயல்படுகிறது:
கம்ப்ரெசர் மோட்டார்களைக் கட்டுப்படுத்தும் புது டெக்னாலஜி இன்வெர்ட்டர் ஏ.சி.களில் பயன்படுத்தப்படுகிறது. இதில், நமக்கு வேண்டிய வெப்பநிலைக்கு ஏற்றவாறு மோட்டாரின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் இன்வெர்ட்டர் உதவுகிறது. இது உள்ளே வரும் Alterante current-ஐ DC ஆக மாற்றும். மின்மோட்டாரின் வேகத்தையும் கட்டுப்படுத்தும். இந்த இன்வெர்ட்டர் ஏ.சி. பல வழிகளில் சாதாரண ஏ.சி.யை விட அதிக பலன்களைத் தருகிறது என்று சொல்லலாம்.

மின்சாரம்:
வழக்கமான ஏ.சி.யில் இருக்கும் மோட்டார் அதிவேகமாக இயங்கும். அல்லது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும். நமக்கு வேண்டிய வெப்பநிலையில் இருக்க அடிக்கடி மோட்டார் ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டேயிருக்கும். இதனால் நமக்கு வேண்டிய வெப்பநிலையை அடைய சாதாரண ஏ.சி.க்கு அதிக மின்சாரம் தேவைப்படும். ஆனால், இன்வெர்ட்டர் ஏ.சியில் மோட்டார் ஒரே சீரான வேகத்தில் இயங்கும் என்பதால் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

சத்தம்:
இன்வெர்ட்டர் ஏ.சி.யில் இருக்கும் மோட்டார் சீரான வேகத்தில் ஓடுவதாலும் அடிக்கடி ஸ்விட்ச் ஆஃப் ஆகி ரீஸ்டார்ட் ஆகாது என்பதாலும் அதிக சத்தத்தை எழுப்பாது. வரும் சத்தமும் சீராக இருக்குமென்பதால் நம் தூக்கமும் பாதிக்கப்படாது.

நீண்ட நாள் உழைக்கும்:
இன்வெர்ட்டர் ஏ.சி.யில் இருக்கும் மோட்டார் சீராக இயங்கும் என்பதால் நீண்ட நாள் உழைக்கக்கூடியது. ஏ.சி.யில் மற்ற பாகங்களைவிட மோட்டாரே அதன் வாழ்நாளைத் தீர்மானிக்கும் என்பதால் இன்வெர்ட்டர் ஏ.சி, சாதாரண ஏ.சி.யைவிட அதிக நாள்கள் உழைக்கும்.

ஆரம்ப விலை அதிகமாக இருந்தாலும் மின்சார சிக்கனம், நீண்ட நாள்கள் உழைக்கும் போன்ற காரணங்களால் இன்வெர்ட்டர் ஏ.சி.யையே தேர்ந்தெடுக்கலாம்.
இவைத் தவிர எந்த அறைக்கு எவ்வளவு டன் ஏ.சி, மின்சாரம் மிச்சப்படுத்தும் ஸ்டார் ரேட்டிங், இன்ஸ்டலேஷன், சர்வீஸ் என ஏகப்பட்ட விஷயங்களைக் கவனித்தே ஏ.சி. வாங்க வேண்டும்.
எந்த ஏ.சி. வேண்டுமென்றாலும் வாங்குங்கள். ஆனால், முடிந்தவரை அதைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். ஏனெனில் ஏ.சி என்பது ஓர் அறையைக் குளிர்வித்து இந்தப் பூமியையே சூடாக்கும் ஒரு விஷயம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

எவ்வாறெயினும் AC உடல் நலத்தி்ற்கு கேடு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

Comments