ஆந்திராவில் இருந்து 2014ல் கிளம்பிய சரக்கு ரயில்.. 4 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி. சென்றடைந்த விநோதம்

ஆந்திராவில் இருந்து உர மூட்டைகளுடன் கிளம்பிய சரக்கு ரயில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1,326 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரப்பிரதேசத்தை கடந்த 25ம் தேதிதான் சென்றடைந்துள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி 1,316 உர மூட்டைகளுடன் சரக்கு ரயில் ஒன்று ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இது கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி ரயில் நிலையத்தை அடைந்த போது ரயில்வே அதிகாரிகளே சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
வெறும் 42 மணி நேரம் 13 நிமிடங்கள் கொண்ட இந்த பயண தூரத்தைக் கடக்க அந்த சரக்கு ரயில் 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், சில சமயங்களில் சரக்குகள் ஏற்றப்படும் சரக்குப் பெட்டகங்கள் ரயிலில் இணைக்க முடியாத நிலையில் இருக்கும். அப்போது அதனை யார்டுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். அதுபோன்ற சமயங்களில் சில சரக்குப் பெட்டகங்கள் மாயமாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலைதான் இதில் நடந்திருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

Comments