உலகிற்கே மூத்த மலை பொதிகை: தாமிரபரணியை கொண்டாடுவோம்
இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை நிலம், நீர் வாழ் உயிரினங்களும் உள்ளன. இம்மலைத்தொடர் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் தொடங்கி, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா - குஜராத் எல்லையிலுள்ள தபதி நதியின் தெற்கே முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது.
இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும். இந்த பொதிகை மலைதான் உலகத்திலேயே முதிர்ந்த மலை. இங்குதான் ஆதி மனிதர்கள் தோன்றி உள்ளனர். பொதிகை மலையின் தொடர்ச்சி இலங்கை வரை நீண்டிருந்துள்ளது. இலங்கையில் தற்போதும்கூட முதல் மனிதன் காலடிபட்ட இடமாக ஆதாம் மலை போற்றப்படுகிறது.
பொதி என்ற சொல்லுக்கு பிணிப்பு, தொகுதி, மூளை, அரும்பு என்று பொருட்கள் இருக்கின்றன். இவை அனைத்துக்குமே முதல் என்ற மறுபெயர் இருக்கிறதல்லவா? தீப்பிழம்புகளாக சுழன்று கொண்டிருந்த பூமியில் அணுக்கள் ஒன்றாக பிணிந்து முதன்முதலில் வெப்பம் தணிந்து இறுகிய இடம்தான் பொதிகை. செடி, கொடி முளைப்பதற்கும் உயிர்கள் அரும்புவதற்கும் தகுந்த முதல் இடமும் இதுதான்.
இந்த மலையில்தான் தென்றல் தோன்றுகிறது. சந்தன மரங்களில் படிந்து வீசும் தென்றல் காற்று, மனித உடம்புக்கு நோய் தீர்க்கும் அருமருந்து. சிவபெருமானே கூத்தாடும்போது தென்றல் வீச வேண்டி பொதிகை மலையை நோக்கி முகத்தை வைத்துதான் நடனமாடினாராம்.
ஆரம்மென்கால் திருமுகத்திடை வீச
மடுக்கவும் தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ
தென்திசை நோக்கி அடுக்க வந்து உவந்து ஆடுவார்
என திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதி அடிகளார் எழுதியுள்ளார்.
பொதிகை மலையில் ஓங்கி வளர்ந்துள்ள தேக்கு, வேங்கை, கோங்கு, குங்கிலியம் முதலிய மரங்களெல்லாம் பொதிகை மலைக்கு மேலே வரும் மேக கூட்டங்களை இழுத்து, உடனே மழை பொழிய செய்யும் ஊக்கிகளாக உள்ளன. இதனால் தான் தாமிரபரணி வற்றாத நதியாக ஓடுகிறது.
‘திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள்சுரந்து பெரிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே’
என குற்றால குறவஞ்சியில் திரிகூட ராசப்பர் பொதிகை மலை புகழை கூறியுள்ளார்.
பொதிகை மலை குளிரை ஒரு மனிதன் தாங்கிக் கொண்டு விட்டால் அவன் இமயமலையில் உள்ள குளிரை எளிதில் தாங்கி விடுவான். ஏனென்றால் பொதிகை மலையின் சீதோஷ்ண நிலை அப்படிப்பட்டது. இங்கு உள்ள மூலிகை மணம் கலந்து வரும் தென்றலை சுவாசித்தால் சாப்பிடாமலேயே மனிதர்களால் வாழ முடியும். எனவே தான் சித்தர்களும் சாதுக்களும் தாங்கள் உறையும் இடமாகவே பொதிகைமலையை கருதுகிறார்கள். பொதிகை மலையில் தென்றல் மட்டும் தோன்றவில்லை. தாமிரபரணியும் தோன்றுகிறாள். தமிழும் தோன்றியது. பல்வேறு பெருமை பெற்ற பொதிகை மலை உச்சியில் எத்திசையும் புகழ் மணக்கும், முத்தமிழின் முதுபெரும் தொண்டன் அகத்தியர் நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Comments
Post a Comment