நியாண்டர்தால்

மனிதனின் சகோதர இனம் நியாண்டர்தால் அழிந்த கதை! #Neanderthals

மனித இனம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்குத் தற்போது பலருக்கும் விடை தெரியும். ஆனால் விடை தெரியாத ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு கதைகள் மனிதனின் தோற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆனால் டார்வினின் பரிணாம கோட்பாடு அதையெல்லாம் உடைத்து குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதைச் சொல்லியது.அப்போதைய நாளில் இதற்குக் கேலிகளைத்தான் முதலில் சந்தித்தார் டார்வின். இன்று உலகமே அறிவியல் உண்மையாக அதைப் பார்க்கிறது. பூமியில் தோன்றிய உயிரினங்கள், தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில்தான் தற்போதைய உலகமும் அதன் செயல்பாடுகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன. அந்தப் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் அடியோடு மறைந்து போய் விட்ட வரலாறுகளும் உள்ளன. அப்படி மறைந்துபோன ஒரு இனம்தான் நியாண்டர்தால் மனிதர்கள். கற்காலத்திற்கெல்லாம் முந்தைய ஆதிகாலத்தில் சிம்பன்சி குரங்கிலிருந்து மனித இனம் உருவாகிய இருந்த காலத்தில்தான் இந்த நியாண்டர்தால்(Neanderthals) மனிதர்களும் பூமியில் வாழ்ந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் அந்த இனம் எப்படி மறைந்து போனது என்று எவருக்கும் புரியவில்லை. அதுகுறித்த ஒரு ஆய்வின் முடிவு சில மாதம் முன்பு வெளிவந்துள்ளது. 

நியாண்டர்தால் மனிதர்களின் மூளை அமைப்பில் இருந்த குறைதான் அந்த இனம் அழிவதற்கான காரணம் என அந்த ஆய்வு கூறுகிறது. இதனால் மூளையோடு தொடர்புடைய நினைவாற்றல், சிந்தனைத் திறன், தொடர்பியல் திறன்கள், அறிவாற்றல் போன்ற பண்புகளிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவை சமூகத் திறன்களை அதிகமாகப் பாதித்ததே நியாண்டர்தல் மனிதர்களை அழிவை நோக்கித் தள்ளியுள்ளது. ஜப்பானின் கியோ பல்கலைக்கழகத்தைச் ( Keio University) சேர்ந்த ஆய்வாளர் நயோமிச்சி ஒகிஹரா (Naomichi Ogihara) வும் அவரது சக ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வுக்காக நான்கு நியாண்டர்தால் மூளை புதை படிமங்களையும் நான்கு ஹோமோசெப்பியன்(Homo sapien) மூளை புதை படிமங்களையும் வைத்து கணினி மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் இரு இனத்தின் மூளை மாதிரியையும் ஒப்பிட்டு சில முடிவுகளை எட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போதிருக்கும் மனிதர்களில் 1185 பேரின் மூளையின் MRI தரவுகளைக் கொண்டு சராசரி மனித மூளையினை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் ஆரம்ப கால மனிதர்களான ஹோமோசெப்பியன்களின் மூளை மாதிரியையும் நியாண்டர்தால் மனிதர்களின் மூளை மாதிரியையும் கணிக்க முடிந்தது. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏற்பட்ட ஆச்சர்யம். இரண்டு மூளை மாதிரியும் ஏறக்குறைய ஒரே அளவுடையவை. ஆனால் மூளையின் உட்பகுதி வடிவங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. 

ஹோமோசெப்பியன்களின் மூளை மாதிரி நியாண்டர்தால் மனிதர்களின் மூளையைவிட பெரியதாக இல்லாவிட்டாலும் அவர்களின் சிறுமூளையானது நியாண்டர்தால்களின் சிறுமூளையைவிடப் பெரியவை. இவைதான் உடலின் சமநிலை, ஒருங்கிணைப்பு இயக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் சிறுமூளைப் பகுதியில் நியூரான்கள் அதிகமாகக் காணப்படுவதால் அறிவாற்றல், மொழித்திறன், நினைவாற்றலின் இயக்கம், அறிந்துகொள்ளுதல் போன்ற செயல்பாடுகளும் அதிகமாக இருக்கும். ஆய்வாளர் ஒகிஹராவின் கருத்துப்படி, "மேற்குறிப்பிட்டவை ஹோமோசெப்பியன்கள் மாறிய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து உயிர் பிழைத்துக் கொண்டன என்கிறார். 

யார் இந்த நியாண்டர்தால்கள்?

பூமியில் மனித இனம் தோன்றியபோது உடன் தோன்றிய சகோதர இனம் என்று நியாண்டர்தால்களை அறிமுகப்படுத்துகின்றனர் அறிவியலாளர்கள். இவர்கள்தான் முதல் குகை மனிதர்கள் என்றும் சொல்லப்படுகிறது.  சகோதர இனமாக இருந்தாலும் காலச்சூழல் போட்டியில் ஹோமசெப்பியன்களே நியாண்டர்தால்களை அழித்திருக்கலாம் எனப் பல கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தன. இதுமட்டுமில்லாமல் நியாண்டர்தால்கள் அழிந்ததற்கு இன்னும் பல்வேறு கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. வெப்பநிலையின் காரணமாக அழிந்திருக்கலாம். கொடிய நோய் பெரியளவில் தாக்கி இறந்திருக்கலாம். ஆரம்பகால ஹோமோசெப்பியன்களே உணவு மற்றும் தங்கள் இருப்பிற்காக அழித்திருக்கலாம். இவையெல்லாம் வெறும் யூகங்களாக மட்டும் இருக்கும் நிலையில் இந்த ஆய்வு முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் சயின்டிபிக் ரிபோர்ட் (Scientific Report) எனும் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

நியாண்டர்தால் மனிதர்களின் கண் பார்வையானது மிகவும் துல்லியமானது அதனால் அவர்கள் மிகச்சிறந்த வேட்டைக்காரர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களின் சமூக அறிவாற்றலின் பற்றாக்குறையால் மாறிய கடும் சுற்றுச்சூழலில் தப்பிப் பிழைக்க முடியவில்லை. 50,000 அண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்த இனமாக மாறிவிட்டது நியாண்டர்தால். முன்னமே கூறிய தொடர்பியல் திறன்களும் அறிவாற்றலும் நினைவாற்றலும்தான் மனித இனத்தை இப்போதும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. பரிணாம கோட்பாட்டில் தக்கன பிழைத்திருக்கும் (survival of the fittest) என்ற கூற்றைக் கேள்விப்பட்டிருப்போம். அதற்குப் பொருள் வலியவை மட்டும் உயிர் வாழும் என்பதில்லை. மாறக்கூடிய கடுமையானச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அந்த உயிரினம் தனனைத் தகவமைத்துக் கொள்ளும் என்பதே. ஆனால் தற்போது மனித இனமே எல்லாவற்றையும் மாற்றும் இனமாக இருக்கிறது. இயற்கையும் அதற்கான விளைவுகளைக் காட்டாமல் இல்லை.

Comments

Popular Posts