மனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI

மனிதனின் உடல் செயல்பாடுகள் மற்றும் இறப்பை, மருத்துவரைவிடக் கூகுளின் செயற்கை நுண்ணறிவு கணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனித உடல்நிலை மற்றும் மருத்துவம் சார்ந்த செயற்கை நுண்ணறிவுகளை (artificial intelligence) உருவாக்க முயலும் நிறுவனங்களில் கூகுள் நிறுவனமும் ஒன்று. தற்போது கூகுள், மனிதனின் இறப்பைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி அது மருத்துவரை விடத் துல்லியமாகக் கணிக்கும் எனச் செயல்படுத்திக் காட்டியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளிதழில் கூறப்பட்டுள்ளவை, ஒரு பெண் மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 9.3 சதவிகிதம் மட்டுமே இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை வைத்துக்கொண்டு, பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ளக் கூகுள் நிறுவனத்தின் AI 1,75,639 மருத்துவத் தரவுகளை ஆராய்ந்தது. இதைக் கொண்டு அந்தப் பெண் 19.9 சதவிகிதம் அவர் இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் சில நாள்களுக்குள் இறந்துவிட்டார். பல்வேறு மருத்துவத் தரவுகளைக் கொண்டு மிக குறைந்த நேரத்தில் ஆராய்ச்சி செய்து, இந்த இறப்பை கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) துல்லியமாகக் கணித்துள்ளது.
இதன் மூலம் இந்தக் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) 95 சதவிகிதம் வரை துல்லியமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் துல்லியமாகக் கணிக்க இந்தச் செயற்கை நுண்ணறிவைத் தொடர்ந்து தயார்ப்படுத்தி வருகின்றனர். இது வருங்காலத்தில் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இறப்பு மட்டுமல்லாது ஒரு நோயாளியின் உடலில் உள்ள மருத்துவ வரலாற்றைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments