ஓடும் ரயிலில் 'செல்பி' வேண்டாம்: ஆர்.பி.எப்., போலீஸ் எச்சரிக்கை

'ஓடும் ரயிலில், 'செல்பி' எடுக்க வேண்டாம்' என, ஆர்.பி.எப்., போலீசார் எச்சரித்துள்ளனர்.
சேலம், ஆர்.பி.எப்., கமிஷனர் பொன்ராஜ் உத்தரவின்படி, 'பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணி, ஜங்ஷன் முன்னுள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுனில்குமார், எஸ்.ஐ., பெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். சூரமங்கலம் புனித ஜோசப் பெண்கள் பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜங்ஷனில் உள்ள, பிளாட்பாரங்களுக்கு பேரணியாக சென்று, பயணிகளிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், 'ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்யும் பெண்கள், நகைகளை அணியக்கூடாது. அருகில் இருக்கும் பயணிகள் கொடுக்கும், உணவு பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது. படியில் நின்று கொண்டு, 'செல்பி' எடுக்கக்கூடாது, பாலியல் தொல்லை உள்ளிட்ட எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும், 182 என்ற இலவச எண்ணிற்கு அழைத்தால், ஆர்.பி.எப்., போலீசார் சம்பவ இடம் வந்து உதவி செய்வர்' என கூறப்பட்டிருந்தது.

Comments